search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டணி தொகுதிகள்"

    அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளதையடுத்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று வெளியாகிறது. #ADMK #BJP

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க. வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா.வுக்கு 1, புதிய தமிழகம் கட்சிக்கு 1, புதிய நீதிக்கட்சிக்கு 1, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன.

    பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகிவிட்டன. 5-வது தொகுதி எது என்பதில்தான் இழுபறி நிலை இருந்தது. வடசென்னை, திருச்சி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் இருந்து ஒன்றை பா.ஜ.க. கேட்டு வந்தது.

    ஆனால், அ.தி.மு.க. தலைமை பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ராமநாதபுரம் தொகுதியை தருவதாக வாக்குறுதி அளித்தது. இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது, ராமநாதபுரம் தொகுதியை பெற பா.ஜ.க. சம்மதம் தெரிவித்துவிட்டது.



    இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இனி யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகும் என தெரிகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியலை வெளியிட இருக்கின்றனர்.#ADMK #BJP
    இன்று இரவு அல்லது நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் வெளியாகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    தி.மு.க. தனது பிரசாரத்தை மிகப்பெரிய அளவில் 12500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி சபை கூட்டத்தின் மூலமாக பிரசாரங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்.

    நியாயமாக பார்த்தால் தமிழகத்தில் 21 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வேண்டிய நிலை. ஆனால் 3 தொகுதிகளை தவிர்த்து 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை இங்குள்ள தேர்தல் கமி‌ஷன் சொல்லி இருக்கிறது. வழக்கை காரணமாக சொல்லி இருக்கிறார்கள்.

    வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபல்ல. தடை உத்தரவு போடவில்லை. எனவே அந்த 3 தொகுதிகளுக்கு தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? இதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அதைத்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை போட்டிருக்கிறோம்.

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கக்கூடிய இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 15 மாதங்களாக இந்த 18 தொகுதிகளில் தேர்தலை நடத்தாமல் சதி செய்து வந்துள்ளது.

    இடையில் திருவாரூர் தொகுதியில் தேர்தல் என்று அறிவித்தார்கள். எந்த விதிமுறையில் இப்படி அறிவித்தார்கள் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

    தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை உள் நோக்கத்தோடு செயல்படக்கூடாது. எனவே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தேர்தல் கமி‌ஷனில் நேரம் கேட்டு இருக்கிறார்கள். இன்றோ அல்லது நாளையோ நேரம் ஒதுக்கி தருவதாக கூறி இருக்கிறார்கள்.

    அப்போது எங்களது பாராளுமன்ற உறுப்பினர் சிவாவும், டி.கே.எஸ். இளங்கோவனும் சென்று எங்களது கோரிக்கையை மனுவாக வழங்க இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லை என்று சொன்னால் தேவைப்பட்டால் நாங்கள் உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம்.



    கேள்வி:- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை எப்போது அறிவிப்பீர்கள்?

    பதில்:- ஓரளவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்று பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறோம். இருந்தாலும் மரபுப்படி எல்லா கட்சிகளின் தொகுதிகளும் முழுமை அடைந்த பிறகு யாருக்கு எந்த தொகுதி என்பது வெளியிடப்படும். இன்று இரவோ அல்லது நாளையோ வெளியிடப்படும்.

    கே:- தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?

    ப:- இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

    கே:- தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. மே 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

    ப:- நீங்கள் ஒரு சந்தேகத்தில் கேட்கிறீர்கள் அந்த சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.

    கே:- மதுரையில் சித்திரை திருவிழாவின்போது தமிழகத்தில் தேர்தல் நடக்கிறதே?

    ப:- தேர்தல் கமி‌ஷன் தேர்தலை அறிவிக்கும்போது வெயில், பள்ளி, கல்லூரி தேர்வுகள், திருவிழாக்கள் எல்லாவற்றையும் மனதில் வைத்துதான் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். ஆனால் மதுரையில் நடக்கக்கூடிய கள்ளழகர் விழாவை பற்றி ஏன் நினைக்கவில்லை என்பதுதான் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது.

    எனவே இதுகுறித்தும் தேர்தல் கமி‌ஷன் பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

    கே:- 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

    ப:- இடைத்தேர்தலில் தி.மு.க. மட்டும் தான் போட்டியிடும்.

    கே:- வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதா?

    ப:- குளறுபடி உள்ளதாக மனு கொடுத்திருக்கிறோம். இதுதொடர்பாக மீண்டும் வலியுறுத்துவோம்.

    கே:- அ.தி.மு.க. கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- அது கொள்கை கூட்டணி அல்ல. தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் கொள்கை கூட்டணி

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin

    ×